சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் ஆழமான குளங்கள் விபத்து ஏற்படும் அபாயம்
பேராவூரணி, டிச. 10 சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில், தடுப்புச் சுவர் இன்றி, ஆபத்தான நிலையில் உள்ள சாலையோர குளங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக தடுப்புச் சுவர் அமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடைவீதியில் இருந்து மல்லிப்பட்டினம் கடைவீதி வரை, கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் நான்கு சாலையோர குளங்கள் தடுப்பு சுவரின்றி, ஆபத்தான நிலையில் உள்ளன.
சேதுபாவாசத்திரம் கடைவீதி அருகே உள்ள பள்ளிவாசல் குளம், அதேபோல் மனோரா சுற்றுலாத்தளம் நுழைவாயிலின் எதிரே உள்ள குளம், மல்லிப்பட்டினம் வினோத் பிரியா திருமண மண்டபம் எதிரே உள்ள குளம், கடைவீதியில் உள்ள குளம் என சாலை ஓரத்தில் உள்ள 4 குளங்கள் தடுப்புச் சுவர் இன்றி பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையில் எந்த நேரமும் கால்நடைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் விபத்தை தவிர்க்க வாகனங்களை திருப்பும்போது, வாகனங்கள் பாதுகாப்பற்ற குளத்திற்குள் தவறி விழும், அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையோர குளங்களுக்கு பாதுகாப்பான சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்" என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பேராவூரணி த.நீலகண்டன்
No comments:
Post a Comment