கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி குடும்பத்தினருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆறுதல் இழப்பீட்டை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்
பேராவூரணி, நவ.26 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியையாக பணியாற்றி வந்த ஆசிரியை ரமணி என்பவர் அவரது காதலன் மதன்குமாரால் கடந்த புதன்கிழமையன்று குத்திக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.காமராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளருமான சி.வி.சேகர் ஆகியோர் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை கிராமத்தில் கொல்லப்பட்ட ஆசிரியை ரமணி வீட்டிற்கு சென்று, அவரது பெற்றோர், உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறுகையில், தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை குத்திக் கொல்லப்பட்டுள்ளார். ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள இழப்பீடு ரூபாய் 5 லட்சம் என்பது ஏற்கத்தக்கதல்ல. கள்ளச்சாராய மரணத்திற்கு அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. ரூ.50 லட்சமாக இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த வழக்கை அரசு முறையாக கையாண்டு குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அப்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவருமான எஸ்.வி.திருஞானசம்பந்தம், முன்னாள் கயறு வாரியத் தலைவர் நீலகண்டன், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.அருணாசலம், பேராவூரணி ஒன்றியக் குழு தலைவர் சசிகலா ரவிசங்கர், பேராவூரணி நகரச் செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன், அதிமுக நிர்வாகிகள் ரா.க.செல்வகுமார், மீனவ ராஜன், செல்வக்கிளி, கூத்தலிங்கம் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.
பேராவூரணி நீலகண்டன்
No comments:
Post a Comment