மழையால் வீடு இடிந்த குடும்பத்துக்கு எம்எல்ஏ நிவாரண உதவி
தஞ்சாவூர், நவ.24 -பேராவூரணி அருகே மழையால் வீடு இடிந்த குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, பேராவூரணி எம்எல்ஏ நிவாரண உதவி வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குப்பத்தேவன் ஊராட்சி, செல்லப்பிள்ளையார் கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவதி, இவரது கணவர் செல்வமுத்து. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், வியாழக்கிழமை காலை இருவரும் வேலைக்கு சென்றிருந்த நிலையில், மழையால் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.
நல்வாய்ப்பாக வீட்டில் எவரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதில், வீட்டில் இருந்த உபயோகப் பொருட்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் சேதமடைந்தது. பேராவூரணி வருவாய்த்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் நேரில் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.5 ஆயிரம் நிதியுதவி அளித்தார்.
அப்போது, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், திமுக ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் பாலு, கிளைச் செயலாளர் முத்தையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment