தஞ்சை மாவட்டம் ஆடுதுறை சங்கடி அருகே உள்ள எச்.பி பெட்ரோல் பங்கில் பெட்ரோல் உடன் தண்ணீர் கலந்து வருவது தற்போது தெரிய வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 9ம் தேதி செவ்வாய்க்கிழமை அம்மாச்சத்திரம் சென்று விட்டு பாஸ்கரராஜபுரத்திற்கு திரும்பிய சான்ட்ரோ காருக்கு காலை 8:58 மணிக்கு ரூ. 2 ஆயிரத்திற்கு பெட்ரோல் போட்டுள்ளனர்.
பெட்ரோல் போட்ட கார் பங்கிலிருந்து மெயின் சாலைக்கு வந்த நிலையில் சுமார் 100 அடி தூரத்திற்கு உள்ளாக உடனடியாக திடீரென கார் இன்ஜின் செயல்படாமல் நின்றது. பலமுறை முயற்சி செய்தும் கார் இஞ்சின் ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் செய்வது அறியாது சாலையோரம் காரை தள்ளி நிறுத்திவிட்டு மெக்கானிக்கை அழைத்து பார்த்தனர்.
பலமுறை கார் இஞ்சினை ஸ்டார்ட் செய்து பார்த்தும் தொடர்ந்து அதில் பவர் சப்ளை குறைந்தது. அதற்கான உபகரணங்களை புதிதாக வாங்கி மாற்றியுள்ளனர். இருப்பினும் ஒன்றன்பின் ஒன்றாக உபகரணங்களை மாற்றி பார்த்தும் இஞ்சின் ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் குழம்பிப்போன மெக்கானிக் மற்றும் டிரைவர் காரணம் தெரியாமல் இருந்த நிலையில் இன்ஜின் பகுதியில் வந்த பெட்ரோல் நிறம் மாறி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பெட்ரோலுடன் அதிகளவில் தண்ணீர் கலந்திருப்பது தெரியவந்தது. கார் திடீரென நின்றதற்கும் இஞ்சின் ஸ்பேர் பார்ட்ஸ் பாதிக்கப்பட்டதற்கும் காரணம் பெட்ரோலுடன் தண்ணீர் அதிக அளவில் கலந்திருப்பது தான் என்பது தெரிய வந்தது, காரில் ஏற்கனவே சுமார் ஆறு லிட்டருக்கு மேலாக பெட்ரோல் இருந்த நிலையில் பங்கில் போடப்பட்ட பெட்ரோல் முழுவதையும் கேனில் பிடித்து பார்த்த போது அதில் பெருமளவில் தண்ணீர் இருந்ததை அறிந்தனர் இதனால் தான் கார் பழுதாகி நின்றிருப்பது உறுதியானது.
இது தொடர்பாக ஆடுதுறை எச் பி பெட்ரோல் பங்கில் அணுகி கேட்டபோது தண்ணீர் கலந்த பெட்ரோல் நிரப்பியது தொடர்பாக பிரச்சனை வரும் என்று எதிர்பார்த்தது போல் பங்க் ஊழியர்கள் அணுகினர். தொடர்ந்து இது குறித்து பங்கு நிர்வாகப் பொறுப்பாளரிடம் போன் மூலம் தெரிவித்தனர். சுமார் மூன்று மணி நேரம் வாடிக்கையாளர்களை காத்திருக்க வைத்த பங்க் உரிமையாளர் நேரில் வந்து பேசுவதாக வந்தவர், தற்போது எத்தனால் 20% கலந்து தரப்படுவதால் இந்த நிலை வருகிறது என்று புலம்பினார்.
ஆனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு உரிய பதில் எதுவும் தராமல் அலட்சியமாக அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். எங்களுக்கே குறைந்த லாபம் தான் கிடைக்கிறது. வேண்டுமானால் பெட்ரோலுடன் தண்ணீர் உள்ளதை வீடியோ வெளியிடுங்கள். கோர்ட்டுக்கு போய்க்கொள்ளுங்கள். எங்களுக்கு எப்படி செய்ய வேண்டும் என்று தெரியும் என்று அலட்சியமாக பதில் அளித்து தமது காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். அந்தப் பெட்ரோல் பங்கில் கடந்த ஒரு வாரம் முன்பு பள்ளம் தோண்டி தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து போடப்பட்டதால் ஏற்பட்ட நஷ்டத்தை வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர் தரவேண்டும் என்று கோரிக்கையும் வலு பெற்று உள்ளது. இது குறித்து திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாஃபர் சித்திக் மற்றும் போலீசாரிடம் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment