திருவையாறு வட்டாரம் கீழ திருப்பந்துருத்தி ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஒரு பண்ணை குடும்பத்திற்கு இரண்டு நெட்டை ரக தென்னங்கன்றுகள் வீதம் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னை மர வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக அந்த ஊராட்சியில் பண்ணை குடும்பத்திற்கு இரண்டு நெட்டை ரக தென்னங் கன்றுகள் வீதம் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருவையாறு வட்டார ஒன்றிய குழு தலைவர் கோ அரசாபகரன், வட்டார அட்மா திட்ட தலைவர் அகமது மைதீன், கவுன்சிலர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினர். ஒன்றிய குழு தலைவர் அரசாபகரன் பேசுகையில், இவ்வாறு அரசு மூலம் வழங்கப்படும் இலவச தென்னங்கன்றுகளை பெற்று செல்லும் விவசாயிகள், பண்ணை மகளிர் தங்கள் வீட்டின் அருகிலோ அல்லது வயல்வெளியிலோ உடன் இந்த தென்னங்கன்றுகளை நடவு செய்து, பராமரித்து, வளர்த்து வர வேண்டும். இதன் மூலம் அவர்களின் குடும்ப வருவாய் உயரும்.
மேலும் இவ்வாறு வழங்கப்படும் தென்னங்கன்றுகள் ஆதார் மற்றும் செல்பேசி எண் அடிப்படையில் ஒவ்வொரு பயனாளிக்கும் ஆன்லைன் புகைப்படம் எடுக்கப்பட்டு வழங்கப்படுவதால், முழுவதுமாக வெளிப்படை தன்மையுடன் விநியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டமானது தமிழக முதல்வர் அவர்களின் சிறப்பு திட்டம். அதனால், தென்னங்கன்றுகள் முறையாக விநியோகம் செய்யப்படுவதை ஆன்லைனில் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா, வேளாண்மை உதவி அலுவலர்கள் இளந்திரையன், ஜென்சி ஆகியோர் செய்திருந்தனர்

No comments:
Post a Comment