பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், நில அபகரிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் ஈசா யோகா மையத்தின் மீது தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! தஞ்சையில் நடைபெற்ற இந்தியமாதர் தேசிய சம்மேளன மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்!!
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் இன்று 6.1.2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலதுணைத் தலைவர் சுந்தரவல்லி தலைமை வகித்தார்.மாநில செயலாளர் ஜி.மஞ்சுளா நடைபெற்ற பணிகள் குறித்தும், சமீப காலமாக பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலை பற்றியும் ஒன்றிய,மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் குறித்தும் விரிவாக பேசினார்.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி வாழ்த்துரை வழங்கினார். மாநில நிர்வாகிகள் ராஜலட்சுமி, வளர்மதி, கண்ணகி, நிசா சத்தியன், லலிதா, லதா,தனலட்சுமி, சபியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெண்கள் உடல்நலம், மனநலம் குறித்து மகளிர் சிறப்பு மருத்துவர் மு.முருகபிரியா , மகளிர் அறுவை சிகிச்சை மருத்துவர் வானதி ஆகியோர் உரையாற்றினார்கள். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி பகுதியில் அமைந்துள்ள ஈசா யோகா மையம் வனப்பகுதியில் உள்ள பழங்குடி இனத்தவர்களுடைய, விவசாயிகளுடைய நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது.
இங்கு பயிற்சிக்கு, தியானத்திற்கு வரும் இளம் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கும் போதை பழக்க வழக்கத்திற்கு அடிமை யாக்கப்படுகிறார்கள். சமீபத்தில் திருப்பூரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்னும் திருமணம் ஆன இளம்பெண் ஈசா யோகா மையத்தை விட்டு பதற்றத்துடன் ஓடி வந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. பின்னர் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது கணவர் தனது மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு அவசர அவசரமாக ஞாயிற்றுக்கிழமை பிரேத உடற்கூராய்வு பரிசோதனை நடத்தப்படுவதில்லை என்று சொல்லப்படுகின்ற நிலையில்,அவரது உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அவரது கணவருக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது மிகப்பெரிய சந்தேகத்தை ஈஷா யோகா மையம் மீது ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மக்களுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, போதைப் பழக்கங்களை ஊக்குவித்து வரும் பாலியல் வன் கொடுமைகளை நடத்தி வரும் ஈசா யோகா மையம் மீது தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் தமிழ்நாடு முதல்வரை வலியுறுத்துகிறது,
கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு ஆண்டுகளாக பணி செய்து வந்த நிலையில் அவர்களை பனி நிரந்தரம் செய்யாமல் வேலை நீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர்களின் அர்ப்பணிப்பான பணிகளை உணர்ந்து மீண்டும் பணியமர்த்த வேண்டும், திமுக அரசு தேர்தல் காலத்தில் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் அளிப்போம் என்ற தேர்தல் கால வாக்குறுதி ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருட காலமாகியும் நிறைவேற்றப் படவில்லை. உடனடியாக தமிழர் திருநாளாம் பொங்கல், மற்றும் தமிழ் புத்தாண்டு நாளிலிருந்து வாக்குறுதி அளித்தபடி ரூபாய் 1000 இல்லத்தரசிகளுக்கு வழங்க வேண்டும் என்று இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. முன்னதாக தஞ்சை மாவட்ட செயலாளர் ம.விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்றார்,முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.

No comments:
Post a Comment