தஞ்சை பெரிய கோயிலில் திருவாதிரை நட்சத்திர நாளில் நடராஜரின் ஆருத்ரா தரிசனம்: ராஜ வீதிகளில் உலா
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் தனிச் சன்னதியில் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் நடராஜரின் ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று இரவு நடராஜப் பெருமானுக்கு விபூதி, பால், தயிர், பழங்கள், மஞ்சள், திரவியப்பொடி, சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இன்று காலை நடராஜ சுவாமிக்கு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவாகம சுந்தரி உடனுறை நடராஜர் கோயிலில் வலம் வந்து நான்கு ராஜ வீதிகளில் உலா வந்தார். முன்னதாக சிவகங்கை பூங்காவில் தீர்த்தவாரி நடைபெற்றது.
பின்னர் மீண்டும் நடராஜப் பெருமான் சிவாகம சுந்தரியுடன் பெரிய கோவிலுக்கு வந்தார். அப்போது மும்மாரி மழை பெய்து நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி மீது நெல்மணிகளை தூவி வழிபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment