தமிழ் பல்கலைக்கழகத்தில் திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜாவின் ‘பாமர எழுத்து’ புத்தகத்தை மையமாக வைத்து சிறப்பு கருத்தரங்கம்.
தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை ஏற்பாடு செய்திருந்த திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜாவின் ‘பாமர இலக்கியம்’ நூலை மையமாக வைத்து சிறப்புக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் அறிமுகவுரை ஆற்றிய முனைவர் இரா. காமராசு நாட்டுப்புறவியல் துறையின் துறைத்தலைவர் அவர்கள், பாமர இலக்கியம் என்பது நாட்டார் இலக்கியம் என்றும் இயக்குனர் அவர்களின் இந்நூலானது நாட்டுப்புற மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக உள்ளது என்றும் அதேபோல் நூலாசிரியர் இயக்கிய திரைப்படங்களும் நாட்டுப்புற மக்களின் வாழ்வியலையும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையையும் பிரதிபலித்தைச் சுட்டிக்காட்டினார்.
இவ்விழாவில் தலைமையுரை ஆற்றிய தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்கள் பேசுகையில் பாமர இலக்கிய நூலின் கட்டமைப்பினை விளக்கி தற்காலத்தில் அதன் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்து வரும்காலங்களில் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இந்நூல் இடம்பெறும் வாய்ப்பு உள்ளதையும் கூறுறினார்.
சிறப்பு விருந்தினரும் பாமர இலக்கிய நூலின் ஆசிரியருமான திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்கள். நூலினைப் படைத்ததற்கான காரணத்தினைக் கூறி தன்வாழ்வியல் அனுபவங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாக இந்நூலினைப் படைக்க எட்டு ஆண்டுகள் ஆனது என்றும், இப்படைப்பின் மூலமாகவே இன்று பல்வேறுபட்ட இளைஞர்களிடம் உரையாடக்கூடிய வாய்ப்பினையும் பெற்றேன் என்றும், தமிழ்ப் பல்கலையில் நின்று பேசுவதனை மாமன்னர் இராஜராஜசோழன் சபையில் நின்று பேசுவது போல உணர்கிறேன் என்று பெருமிதமடைந்ததோடு மட்டுமல்லாமல், இந்த நூல் ஒரு மொழி இலக்கியம் அல்ல, ஒலி இலக்கியம் என்றுகூறி நிறைவு செய்தார். இறுதியில் தன்னுடைய படைப்பில் ஏற்பட்ட கட்டுரையாளர் மற்றும் மாணவர்களின் கேள்விகளுக்கு தகுந்த முறையில் விளக்கமளித்தார்.
இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர்(பொ) முனைவர் சி. தியாகராஜன் அவர்கள் மற்றும் மொழிப்புல முதன்மையர் முனைவர் ச. கவிதா அவர்களும் பாமர இலக்கியம் நூலினைப் பற்றி ஒரு திறனாய்வாகவே வாழ்த்துரை வழங்கினார்கள். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா. மாலதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மாணவர்நல இயக்குநர் முனைவர் சீ. இளையராஜா அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து முனைவர்பட்ட ஆய்வாளர் கா. செல்வகணபதி அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அலுவல் நிலைப்பணியாளர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் இரா. சு. முருகன், மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றார்கள்.

No comments:
Post a Comment