பேராவூரணி அருகே அம்மையாண்டி கிராமத்தில் இரு வேறு சம்பவங்களில் 16.5 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு காவல்துறை விசாரணை
பேராவூரணி, டிச.29 - தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே .அம்மையாண்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் ஆதிராசன். இவரது மனைவி தமிழரசி (வயது 73), வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் வீட்டில் பின்புறம் பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டதும், கதவை திறந்து கொண்டு வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்திருந்தது.
முன்னதாக ஓட்டைப் பிரித்துக் கொண்டு உள்ளே பதுங்கி இருந்த மர்ம நபர் மூதாட்டி தமிழரசியின் கழுத்தில் இருந்த சுமார் 8.5 பவுன் எடையுள்ள தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு கொல்லைப்புற வழியாக தப்பி ஓடினார். மூதாட்டி சப்தம் எழுப்பவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, மர்ம நபர் பின்புறம் இருந்த தென்னந்தோப்பு வழியாக தப்பிச் சென்றுள்ளார்.
இது நடந்த சுமார் அரை மணி நேரத்தில் அம்மையாண்டி ஊராட்சி மன்றத் தலைவர் வை.முத்துராமலிங்கம் என்பவர் வீட்டின் பின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த மர்மநபர்,, அறையில் உறங்கிக் கொண்டிருந்த அவரது மகள் சுமதி (வயது 31) என்பவரின் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தஞ்சையில் இருந்து மோப்பநாய் சோழா, கொண்டு வரப்பட்டு துப்பறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மோப்பநாய் மூதாட்டி தமிழரசியின் வீட்டின் பின்புறம் உள்ள தோப்பின் வழியாக சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடி புதுக்கோட்டை சாலையில் இருந்த ஒரு மெடிக்கல் அருகில் வந்த படுத்துக் கொண்டது.
இதேபோல் ஊராட்சி மன்றத் தலைவர் வை.முத்துராமலிங்கம் வீட்டிலும் மோப்பநாய் துப்பறியும் பணியில் ஈடுபட்டது. தொடர்ந்து இரண்டு வீடுகளிலும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறை ஆய்வாளர் சம்பவ இடத்தில் நேரடியாக வந்து விசாரணை நடத்தினர்.
ஒரே நாளில், ஒரே ஊரில் அடுத்தடுத்து சுமார் 16. 5 பவுன் தாலிச் சங்கிலியை மர்ம நபர் அறுத்துச் சென்ற சம்பவம், இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செங்கமங்கலம் கிராமத்தில் ரேவதி (வயது 26) என்பவரின் 7 பவுன் செயின் திருடுபோனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருட்டு சம்பவம் குறித்து அறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் ஆகியோரை தொடர்பு கொண்டு உடனடியாக குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இப்பகுதியில் நடைபெற்ற தொடர் திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment